இந்திய எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்படை அட்டூழியம்... வலைகளை சேதப்படுத்தியதாக மீனவர்கள் வேதனை!
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர், அதிவேகப் படகுகளில் வந்து தங்களை விரட்டி மிரட்டியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், படகு ஒன்றுக்கு ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து உரிய அனுமதிச் சீட்டுடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு அதிவேக ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அச்சுறுத்தி விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கையால் கடலில் விரிக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் அறுந்து சேதமடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு படகுக்கும் சுமார் ரூ.30,000 முதல் ரூ.1 லட்சம் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாங்கள் எவ்விதத்திலும் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டவில்லை என்றும், இந்தியக் கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்ததை நிரூபிக்கும் வகையிலான ஜி.பி.எஸ். கருவி ஆதாரங்கள் தங்களது படகுகளில் பதிவாகியுள்ளதாகவும் மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்திய எல்லைக்குள் புகுந்து தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் இலங்கை கடற்படையின் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
