நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மார்ச் 6ல் மீண்டும் தொடக்கம்... எவ்வளவு கட்டணம்?!
நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறை இடையேயான சர்வதேசப் பயணிகள் கப்பல் போக்குவரத்து, மீண்டும் வரும் மார்ச் 6ம் தேதி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
வடகிழக்குப் பருவமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சேவை, தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்தவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, சுமார் 4 மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.

'சிவகங்கை' பயணிகள் கப்பல் எனும் இந்த கப்பல், வாரத்தில் 6 நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களும் இயக்கப்படும். தற்போதைய கட்டண முறையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 110 கிலோமீட்டர் (60 கடல் மைல்) தூரத்தை இந்த அதிவேகக் கப்பல் சுமார் 3.5 முதல் 4 மணி நேரத்தில் கடக்கும்.
கப்பல் சேவை நிறுத்தப்பட்டிருந்த காலத்தில், நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள குடியேற்ற அலுவலகம் (Immigration Office) சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை வசதிகள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வரும் காலங்களில் பயணிகளுடன் சரக்குகளையும் கொண்டு செல்லும் வசதியை அறிமுகப்படுத்துவது குறித்துக் கப்பல் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

இந்தப் புதிய சீசனில் இயக்குவதற்காக அனைத்துச் சான்றிதழ்களையும் பெற்ற புதிய கப்பல் ஒன்று, மார்ச் இரண்டாவது வாரத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளை www.sailsubham.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு பயணிக்கு 10 கிலோ வரை இலவசமாகச் சுமைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேலான சுமைகளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவது, யாழ்ப்பாணம் மற்றும் தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
