இலங்கைத் தமிழ்பெண் கொலையில் திருப்பம்... இடுப்பைப் பிடித்துக் கிள்ளி பாலியல் தொல்லை... நண்பர் அதிர்ச்சி வாக்குமூலம்!

 
யாழினி யாழினி

சென்னை கோயம்பேடு பகுதியில் சொகுசு காரை ஏற்றி ஈழத் தமிழ் இளம் பெண் யான்சி (18) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தப்பிப் பிழைத்த அவரது நண்பர் அஸ்ரத் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ வாக்குமூலம் இச்சம்பவத்தின் கொடூரப் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பாக யான்சியின் நண்பர் அஸ்ரத் வெளியிட்டுள்ள வீடியோவில், "கோயம்பேட்டில் உள்ள ஹோட்டல் மதுபாரில் யான்சி நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த ஒரு கும்பல் அவரிடம் தவறான முறையில் வம்பிழுக்கத் தொடங்கியது. அவரது இடுப்பைப் பிடித்துக் கிள்ளி, தங்களோடு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து யான்சி என்னிடம் கூறவே, நான் தட்டிக்கேட்டேன். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் என் முகத்தில் குத்தித் தாக்கியது. பின்னர் பவுன்சர்கள் எங்களை வெளியே அனுப்பினர்."

யாழினி

பாரில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து யான்சி, பவுசியா மற்றும் நண்பர்கள் ஸ்கூட்டரில் கோயம்பேடு மேம்பாலத்தைக் கடக்க முயன்ற போது, அந்த கும்பல் சொகுசு காரில் இவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளது. இருசக்கர வாகனம் மீது காரை இருமுறை மோதித் தள்ளியுள்ளனர். இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட யான்சி மீது மீண்டும் காரை ஏற்றி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அக்கும்பல் தப்பியோடியுள்ளது. இச்சம்பவத்தில் 17 வயது சிறுமி ஒருவரும் பலத்த காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி போலீசாரின் உதவியுடன் முதற்கட்டமாக 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது முக்கியக் குற்றவாளியான சுமன் சக்திவேல், பாலகுரு, ஜோஷ்வா, கிஷோர்குமார், விமல், கோமகன் சுந்தரம், ராகுல் உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

யாழினி

இச்சம்பவம் நடந்த 'சென்னை கேட்வே' மதுபார், தவெக நிர்வாகி ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. சட்டவிதிகளுக்குப் புறம்பாக 18 வயதுக்குக் குறைவான சிறுமிகளை பாருக்குள் அனுமதித்தது மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறியது ஆகிய காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட பாரின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்து மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பாருக்குச் சீல் வைத்துள்ளனர். அதே சமயம் யாசினியை ஏற்றிக் கொன்ற காரில் திமுக கொடி இருந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட பார் உரிமையாளர் மற்றும் நிர்வாகத்தின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.