ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம்: 7-ஆம் நாளில் கஜேந்திர வரதர் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் அருள்!
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில், திரு ஆடிப்பூர உற்சவம் மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. திரு ஆடிப்பூரத் திருவிழாவின் 7-ஆம் நாளான இன்று, கோயிலில் உள்ள பரமபத நாதர் சன்னதி மண்டபத்தில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளினார்.
ஆடிப்பூரத் திருவிழாவினை முன்னிட்டு, யானையைக் காக்கும் கஜேந்திர வரதன் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார் விசேஷ ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
ஆண்டாள் நாச்சியாரின் இந்த அபூர்வத் திருக்கோலத்தைக் காணத் திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வைணவ பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டுத் தினமும் ஆண்டாள் நாச்சியார் பல்வேறு சிறப்பு அவதாரங்களிலும் அலங்காரங்களிலும் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளன.
