ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ., வி.ஜி.சரவணனுக்கு 24 மணி நேரத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

 
ஸ்ரீவைகுண்டம் வி.ஜி.சரவணன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணனுக்கு, உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு  வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணன், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஆளுங்கட்சியான திமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்காகத் தவெக நிர்வாகிகளிடமும், தன்னிடமும் சுமார் ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த ஆசை வார்த்தைகளுக்குத் தான் இணங்க மறுத்ததால், சில அரசியல் புள்ளிகளிடம் இருந்து தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தன் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து இருப்பதாகவும் அவர் உள் துறைக்கும் காவல் துறைக்கும் அவசரக் கடிதம் அனுப்பியிருந்தார்.

ஸ்ரீவைகுண்டம் சரவணன்

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் தவெக மற்றும் திமுக இடையே ஏற்கனவே கடுமையான அரசியல் உள்கட்சிப் பூசல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, ஏரல் பகுதியில் புகழ்பெற்ற வாரச் சந்தை மூடப்பட்ட விவகாரத்தில், தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.சரவணனின் நிலைப்பாட்டிற்கு எதிராக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்துப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவியது.

சட்டமன்ற உறுப்பினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையிலும், அவதுாறு வழக்குகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு வி.ஜி.சரவணனுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்துள்ளது.

அதன்படி, அவரது இல்லம், அலுவலகம் மற்றும் அவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் நேரங்களிலும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கை தூத்துக்குடி மற்றும் தென் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.