காதல் விவகாரத்தில் பயங்கரம்! காதலியின் தந்தையை விரட்டி வெட்டிக்கொன்ற வாலிபர்

 
அரிவாள் வெட்டு

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் காதலியின் தந்தையை வாலிபர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூனம்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (48). கூலித்தொழிலாளியான இவரது மகள் ஆர்த்தி (23), சித்தாலம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் தமிழழகனை (34) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நள்ளிரவில் தமிழழகன் ஈஸ்வரனின் வீட்டு ஜன்னல் வழியாக செல்போன் ஒளியைப் பாய்ச்சி பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த ஈஸ்வரன் வெளியே வந்ததும், தமிழழகன் அங்கிருந்து காரில் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரனும் அவரது மனைவி பாலகுருவும் மோட்டார் சைக்கிளில் தமிழழகனின் வீட்டுக்குச் சென்றனர்.

போலீஸ்

அரிவாளால் வெட்டிக் கொலை

அங்கு இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஈஸ்வரன் தான் கொண்டு வந்த அரிவாளால் தமிழழகனின் தலையில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழழகன் அரிவாளைப் பறித்து, ஈஸ்வரனை விரட்டிச் சென்று வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரிவாள் வெட்டில் காயமடைந்த தமிழழகனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.