எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது - 15 லட்சம் பேர் எழுதவுள்ளனர்!
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டிற்கான (2026-2027) 10-ம் வகுப்பு, பிளஸ்-1 (அரியர்) மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிடுகிறார். சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதவிருக்கும் இந்தப் பொதுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வழக்கமாகத் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் மேல்நிலைப் பள்ளிப் பொதுத்தேர்வு அட்டவணைகள் கல்வி ஆண்டின் நடுப்பகுதியில் அதாவது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த கல்வி ஆண்டில் தேர்தல் மற்றும் இதர காரணங்களைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தேர்வுகள் திட்டமிடப்பட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
இதன்மூலம் மாணவ-மாணவிகள் தங்களது இறுதிப் பரிட்சைக்கான கல்வித் திட்டமிடலை முன்கூட்டியே தொடங்கி, ரிவிஷன் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். இன்று பிற்பகல் 12.30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் வெளியிடும் முழுமையான தேர்வு அட்டவணையில், பாடவாரியான தேர்வுத் தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு குறித்த கால அட்டவணைகள் இடம்பெறும்.

மாணவர்களும் பெற்றோர்களும் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று தேர்வு அட்டவணையின் பிடிஎஃப் வடிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நெருங்கும் சூழலில் மாணவர்களுக்குப் போதுமான கால இடைவெளிகளுடன் இந்த அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேர்வை எதிர்கொள்ளும் பதற்றம் இல்லாமல் மாணவர்கள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இது பெரிதும் உதவியாக இருக்கும்.
