பள்ளியில் கத்திக்குத்து... 4 மாணவர்கள் உயிரிழப்பு... உகாண்டாவில் பேரதிர்ச்சி!
கல்வி கற்கும் பள்ளிக்கூடமே மயானமாக மாறிய அவலம் உகாண்டாவில் நிகழ்ந்துள்ளது. தலைநகர் கம்பாலாவின் மஹிட்னிபகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி ஒன்றில் நேற்று மதியம் இந்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.
நேற்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில், 34 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியுடன் பள்ளி வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி வகுப்பறைக்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த குழந்தைகளைச் சரமாரியாகக் குத்தத் தொடங்கினார். ஆசிரியர்கள் தடுப்பதற்குள் பிஞ்சு குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 4 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கப் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 6 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் உகாண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தப்பியோட முயன்ற அந்த 34 வயது இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்த ரத்தக்கறை படிந்த ஆயுதத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபருக்கும் பள்ளிக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. "இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா அல்லது தனிப்பட்ட பகையா என்பதை உறுதி செய்ய விசாரணை முடிய வேண்டும்" என கம்பாலா காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
செய்தி கேட்டுப் பள்ளிக்கு விரைந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் நிலையை எண்ணிக் கதறி அழுத காட்சி காண்போரை விம்மிதமடையச் செய்தது. பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பள்ளியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது உகாண்டா மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவில் ஏற்கெனவே பள்ளிக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் குழந்தைகளைக் கொன்ற சம்பவம் சமீபத்தில் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
