"தங்கள் கட்சிகளைக் காப்பாற்ற ஸ்டாலினும், இபிஎஸ்ஸும் பதவி விலக வேண்டும்" - அமைச்சர் நிர்மல்குமார்!
செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "இன்னும் 30 நாட்களில் தவெக ஆட்சி கவிழும்" என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் தற்போது கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, திமுகவின் திட்டங்களை அமைச்சர் கடுமையாகச் சாடினார். சட்டமன்ற உறுப்பினர்களைப் பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கி, குறுக்கு வழியில் தவெக ஆட்சியைத் தரைமட்டமாக்கலாம் என்ற அதீத நம்பிக்கையில்தான் மு.க.ஸ்டாலின் "30 நாட்களில் ஆட்சி கவிழும்" என்று சவால் விடுத்துள்ளார் என நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

நேர்மையான முறையில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல், திமுகவும் அதிமுகவும் திரைமறைவில் கைகோர்த்து இதுபோன்ற சதித்திட்டங்களை அரங்கேற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியப் பாரம்பரிய கட்சிகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், அந்தந்த கட்சிகளைக் காப்பாற்ற அதன் தலைவர்களே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"தமிழகத்தில் தற்போது வீழ்ந்து வரும் தங்களது அரசியல் செல்வாக்கைத் தக்க வைக்க இரு கட்சிகளின் தலைமைகளும் தவறான வழிகளைப் பின்பற்றுகின்றன. உண்மையாகவே திமுகவைக் காப்பாற்ற வேண்டும் எனில் மு.க.ஸ்டாலினும், அதேபோல் அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் எனில் எடப்பாடி பழனிசாமியும் உடனடியாகத் தங்களது கட்சிப் பதவிகளில் இருந்து விலக வேண்டும்" என்றார்.

மாமல்லபுரத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணைந்து வரும் சூழலில், திமுக-அதிமுகவின் ரகசியக் கூட்டு மற்றும் எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரம் குறித்து தவெக அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாத நெருப்பைக் கூட்டியுள்ளது.
