"என் பக்கம் கூட ஸ்டாலின் திரும்பவில்லை" - நிகழ்வில் ஸ்டாலின் புறக்கணித்ததாக வைகோ உருக்கம்!

 
வைகோ

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான காரணங்களை வைகோ வெளிப்படுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி முறிவு குறித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, கடந்த சில நாட்களாகத் திமுக தலைமை தன்னை எவ்வாறு அலட்சியப்படுத்தியது என்பது குறித்து மிகவும் உருக்கமாகப் பேசினார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வைகோ பொதுக்குழுவில் விவரித்தார்.  "கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் நான் கலந்து கொண்ட போது, அங்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தேன். நான் அமர்ந்திருந்த சோபாவில் என் அருகிலேயே காலியாக இடம் இருந்தது. ஆனால், அவர் என் அருகில் அமர விரும்பவில்லை. எனக்கு அருகில் அமராமல், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மட்டுமே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்."

வைகோ

தன்னை முற்றிலுமாகத் திமுக தலைமை புறக்கணித்து விட்டதாக வைகோ தனது பேச்சில் ஆதங்கப்பட்டார். திருமண மேடையில் சீமானுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அதற்குப் பிறகு என் பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை.

கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்க வேண்டாம் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, பொது நிகழ்வுகளிலும் இவ்வாறு வெளிப்படையாகப் புறக்கணிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 'தொந்தரவு செய்ய வேண்டாம்' என ஸ்டாலின் கூறியதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், திருமண நிகழ்வில் தனக்கு நேர்ந்த இந்த அவமதிப்பு குறித்தும் வைகோ பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.