திருச்சி இடைத்தேர்தலில் போட்டி - சூசகமாக சொன்ன ஸ்டாலின்!

 
ஸ்டாலின்

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் விவாதப் பொருளாக மாறியுள்ளது.  இத்தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடப் போவதாக வெளியாகி வரும் பரபரப்பான தகவல்களுக்கு, அவர் முதன்முறையாகச் சூசகமான பதிலளித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்ட விதிகளின்படி தனது இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக இத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

மறுபுறம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவினார். திமுகவின் மிக முக்கியத் முகமாக விளங்கும் அவர், மக்கள் பிரசினைகளை எழுப்பத் தற்பொழுது சட்டமன்றத்திற்குள் உறுப்பினராக இல்லாதது அக்கட்சியினரிடையே பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின்

"தலைவர் விரைவில் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும்" என்று திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், பாதுகாப்பான மற்றும் திமுகவின் பாரம்பரிய கோட்டையாகக் கருதப்படும் திருச்சி கிழக்குத் தொகுதி அதற்குச் சரியான களம் என அக்கட்சியின் உள்கட்சி ஆலோசனைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் சென்னையில் இன்று செய்தியாளர்கள் மு.க.ஸ்டாலினிடம், "முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்துள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வருகின்றனவே, அது உண்மையா?" என நேரடிக் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த மு.க.ஸ்டாலின், "திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது ஒரு தனிநபரின் முடிவல்ல. திமுகவின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும் பொதுக்குழு கூடி, தற்போதைய அரசியல் சூழல்களை விரிவாக ஆராய்ந்துதான் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யும்" எனப் பதிலளித்து, யூகங்களை முழுமையாக மறுக்காமல் சூசகமாகப் பேசியுள்ளார்.