"என்னைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்" – திமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணத்தை உடைத்த வைகோ!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான பின்னணியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்பொழுது பகிரங்கப்படுத்தியுள்ளார்.
சென்னை அண்ணாநகரில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக தலைமை தங்களை நடத்திய விதம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
கூட்டணி முறிவிற்கான முதன்மைக் காரணியாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறையை வைகோ சுட்டிக்காட்டினார். "கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காகத் திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க நான் முயன்றேன். ஆனால், என்னைச் சந்திக்க அவர் முற்றிலும் மறுத்து விட்டார். அதுமட்டுமன்றி, 'நேரம் கேட்டு இனித் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றும் ஸ்டாலின் கூறிவிட்டார்."

திமுக கூட்டணியில் உள்ள பிற தோழமைக் கட்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் தங்களுக்குக் கிடைக்கவில்லை என வைகோ வேதனை தெரிவித்தார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் தங்களின் ஆதரவைக் கொடுத்து தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு எதுவும் தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்களை ஏன் இவ்வளவு கேவலமாகப் பேசினீர்கள்? நாங்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தோம்?
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் இணைந்து ஆட்சியமைக்கத் திட்டமிட்டதாக மதிமுக பொதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வைகோவின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
