”ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டு ரூ.1 கோடி நஷ்ட ஈடு தரணும்..” - மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வக்கீல் நோட்டீஸ்!

 
ஆதவ் ஸ்டாலின் ஆதவ் ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா சட்டப்பூர்வ வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது வழக்கறிஞர் மூலமாக அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில், அண்மையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புடையதாகக் கூறி ஜான் பிரிட்டோ என்பவரை மத்தியப் புலனாய்வு அமைப்புகள் விசாரித்தன. இந்த விவகாரம் குறித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜான் பிரிட்டோ என்பவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

ஸ்டாலின் தேர்தல் தமிழகம்

மு.க.ஸ்டாலினின் இந்த பொதுக்கூட்டக் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள ஜான் பிரிட்டோவிற்கும், தமக்கோ அல்லது தமது குடும்பத்தினருக்கோ எவ்வித இரத்தச் சொந்தமோ அல்லது தூரத்து உறவோ கிடையாது என்று அவர் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா தரப்பில் அனுப்பப்பட்டுள்ள சட்ட அறிவிப்பில் முன்கூட்டியே இரண்டு முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.  அரசியல் வன்மத்தோடு, உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறித் தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகத் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். தவறான அவதூறு செய்தியைப் பரப்பியதற்குப் பரிகாரமாக 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இதற்கு முறையான விளக்கம் அளிக்காதபட்சத்தில், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்து சந்திக்க நேரிடும் என்றும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதல்கள் முற்றியுள்ள நிலையில், இந்த வக்கீல் நோட்டீஸ் விவகாரம் மேலும் விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.