OPSஐ சேர்த்த ஸ்டாலின், அப்பாவை மட்டும் ஒதுக்கலாமா?” - மு.க.அழகிரி மகள் கயல்விழி ஆவேசம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி விடுத்துள்ள அறிக்கை அறிவாலய வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி, தனது தந்தை மு.க.அழகிரி புறக்கணிக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். "அதிமுகவில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்தைத் தாய் கழகம் என அழைத்துச் சேர்த்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், தனது சொந்த அண்ணனை மட்டும் இன்னும் ஏன் விலக்கி வைத்திருக்கிறார்? ஓபிஎஸ்-ஐ விட அழகிரி என்ன துரோகம் செய்துவிட்டார்?" என அவர் கேள்வி எழுப்பினார்.

"மு.க.அழகிரி களத்தில் இல்லாதது வரவிருக்கும் தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அழகிரியின் உழைப்பும், ஆதரவும் இல்லாமல் தென் மாவட்டங்களில் வெற்றி பெறுவது எளிதல்ல."
முன்னதாக, அழகிரியின் மகன் துரை தயாநிதியின் உடல்நலக் குறைவின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தது குடும்ப உறவில் சுமூக நிலையை ஏற்படுத்தியதாகக் கருதப்பட்டது. இருவரும் விரைவில் அரசியல் ரீதியாக இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர் தேர்வின் போது அழகிரி தரப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதே இந்தத் திடீர் மோதலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க அழகிரி தரப்பு தனிப்பட்ட வியூகங்களை வகுக்கக்கூடும் எனத் தெரிகிறது. இது திமுகவின் வெற்றியைப் பாதிக்குமா அல்லது ஓபிஎஸ் வருகை அந்த இழப்பைச் சரி செய்யுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.
