திமுக-விற்குப் பேரிடி... ஸ்டாலின் உட்பட 16 அமைச்சர்கள் அதிரடித் தோல்வி!

 
stalin stalin

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுக-விற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், திமுக கூட்டணி வெறும் 73 இடங்களை மட்டுமே பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மொத்தம் 16 அமைச்சர்கள் படுதோல்வியடைந்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது அரசியல் வட்டாரங்களில் ஒரு மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. அவரைத் தொடர்ந்து மூத்த அமைச்சர்களான துரைமுருகன் (காட்பாடி), தியாகராஜன் (மதுரை மத்தி), மா.சுப்ரமணியன் (சைதாபேட்டை), மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்) எனப் பல முக்கிய அமைச்சர்கள் தங்களது கோட்டைகளிலேயே வீழ்ந்துள்ளனர். இது திமுக-வின் நிர்வாகச் செயல்பாடு மற்றும் மக்கள் செல்வாக்கிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் கீதா ஜீவன் (தூத்துக்குடி), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), மற்றும் முத்துசாமி (ஈரோடு மேற்கு) போன்ற செல்வாக்கு மிக்க அமைச்சர்களும் இந்தத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்களின் இந்த வரிசையான தோல்வி, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதே அமைச்சர்களின் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என அரசியல் நோக்கர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.