மு.க.ஸ்டாலின் ராஜினாமா ஏற்பு... ஆளுநர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுக-விற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், திமுக கூட்டணி 73 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, ஜனநாயக மரபுகளைப் பின்பற்றும் வகையில் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமா கடிதத்தைத் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு அனுப்பி வைத்தார். இந்தக் கடிதத்தை ஆளுநர் தற்போது முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த திமுக ஆட்சி அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்துள்ளது. புதிய அரசு அமையும் வரை ஸ்டாலின் இடைக்கால முதலமைச்சராகத் தொடருமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசியலில் 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஆளுநர் ஸ்டாலினின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் பெரும்பான்மை கொண்ட கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
