முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!

 
vijay vijay

 

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று (மே 11) பிற்பகல் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கிறார். முன்னதாக இந்தச் சந்திப்பு பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகச் சட்டமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் சற்று முன்னதாகவே முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னமே மு.க.ஸ்டாலினைச் சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காகத் தலைமைச் செயலகத்திலிருந்து அவர் நேரடியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

vijay

முதலமைச்சர் விஜய் தனது கான்வாய் வாகனங்கள் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு வீரர்களுடன், மு.க.ஸ்டாலினின் இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை நோக்கிப் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசியலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கே சென்று சந்திப்பது இதுவே முதல்முறை. இந்தச் சந்திப்பின் போது மாநில நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் மற்றும் அரசியல் நாகரிகம் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

vijay

ஆழ்வார்பேட்டை பகுதியில் முதலமைச்சரின் வருகையை ஒட்டிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் சூடுபிடித்த சூழலில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, அடுத்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் விஜய் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புகள் அனைத்தும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கித் தமிழகத்தை நகர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.