"மகனை முதலமைச்சராக்குவதுதான் ஸ்டாலினுடைய ஒரே குறிக்கோள்... " - அமித்ஷா ஆவேசம்!

 
அமித்ஷா அமித்ஷா

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாளை (ஏப்ரல் 21) மாலை ஓய உள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக அரசு மற்றும் அதன் தலைமை மீது முன்வைத்துள்ள விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

அமித்ஷா தனது பேச்சில் திமுகவின் 'வாரிசு அரசியல்' குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கருணாநிதி, அவருக்குப் பிறகு ஸ்டாலின், இப்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் எனத் தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அமித் ஷா

முதலமைச்சர் ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் தனது மகனை அடுத்த முதலமைச்சராக்குவதுதான் என்றும், தமிழக மக்களின் முன்னேற்றம் அவரது இலக்கு அல்ல என்றும் அமித்ஷா சாடினார். நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டதாகவும், இதற்குக் குடும்ப ஆட்சியே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக அமித்ஷா புதிய குற்றச்சாட்டுகளை எழுப்பினார்.  கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா (மகளிர் இடஒதுக்கீடு) போதுமான பெரும்பான்மை கிடைக்காமல் தோல்வியடைந்ததற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியே காரணம் என்று அவர் கூறினார்.

அமித்ஷா

நாடாளுமன்றத்தில் பெண்கள் நுழைவதை திமுக மற்றும் காங்கிரஸ் தடுத்துவிட்டதாகவும், இதற்காகப் பெண்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான என்.டி.ஏ (NDA) கூட்டணி, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் எனத் தான் உறுதியாக நம்புவதாகவும், இந்த வெற்றி ஊழல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அமித்ஷா தெரிவித்தார். பிரதமர் மோடியின் தலைமையில் தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்போம் என அவர் வாக்குறுதி அளித்தார்.