"ஸ்டாலின் ஆட்சி ரொம்ப சிறப்பு; குறை சொல்ல எதுவுமில்லை" - கங்கை அமரன்
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விழாவில் கலந்துகொண்ட பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சி குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளன. பாஜக ஆதரவாளராக அறியப்படும் கங்கை அமரன், புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்ற நலத்திட்டத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். விழா முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய மற்றும் மாநில அரசுகள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

"மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - புதுச்சேரி விரைவுச்சாலை உள்ளிட்ட 74 புதிய திட்டங்களைப் பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்துள்ளார். உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டங்கள் புதுச்சேரி மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதம்" எனப் பிரதமரின் பணிகளை அவர் பாராட்டினார்.
செய்தியாளர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்துக் கேட்டபோது, "தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் எந்தக் குற்றமும் குறையும் சொல்வதற்கில்லை.தமிழக மக்கள் தற்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன" என பாராட்டினார்.

பாஜகவின் மேடை ஏறும் ஒரு கலைஞர், அதே மேடையில் இருந்து இறங்கியவுடன் எதிர்க்கட்சியான திமுகவின் ஆட்சியையும், அதன் முதலமைச்சரையும் பாராட்டுவது தமிழக அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இன்று காலைதான் முதல்வர் ஸ்டாலின் தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், கங்கை அமரனின் இந்தப் பாராட்டு திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது அதே சமயம், மதுரையில் இன்று மாலை நடைபெறவுள்ள அதிமுக-பாஜக மெகா கூட்டணி பொதுக்கூட்டத்தில் இத்தகைய கருத்துக்கள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
