ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு... கொளத்தூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆய்வு - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மறுஆய்வு செய்யும் பணி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவின் அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார். இத்தோல்வியைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் குளறுபடிகள் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டு, அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிடங்கில் பாதுகாப்பாகச் 'சீல்' வைத்து வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்களை ஆய்வு செய்யத் தேர்தல் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திமுக முகவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் முன்னிலையில், பூட்டப்பட்ட கிடங்கு திறக்கப்பட்டு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளின் எந்திரங்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு ஆய்வு செய்யப்படவுள்ளன. நாளொன்றுக்குத் தலா 2 வாக்குச்சாவடிகளின் எந்திரங்கள் வீதம் விரிவாகப் பரிசோதிக்கப்பட உள்ளன.

கொளத்தூர் தொகுதி மட்டுமன்றி, தேர்தல் முடிவுகள் குறித்துப் புகார்கள் வரப்பெற்ற காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பிற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
