கொளத்தூரில் ஸ்டாலின் அதிர்ச்சித் தோல்வி... தவெக வேட்பாளர் பாபு வரலாற்று வெற்றி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, ஆளும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்தக் கோட்டையான கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் 19 சுற்றுகளின் முடிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு முதலமைச்சரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஆளுங்கட்சி முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே தனது தொகுதியில் தோல்வியடைவது தமிழக அரசியலில் இதுவே முதல்முறையாகும்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நிலவரப்படி, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு மொத்தம் 76,413 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 67,530 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சாந்தானகிருஷ்ணன் 17,110 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 8,883 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக தனது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி இத்தொகுதியில் 4,704 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும், கொளத்தூர் தொகுதிக்கு வாரந்தோறும் சென்று எண்ணற்ற நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வந்தார். எந்தவொரு குறையும் இன்றி அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரிலேயே அவருக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி திமுகவினருக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றி, தவெக தலைவர் விஜய் என்ற ஒற்றை மனிதரின் ஆளுமைக்கும், தமிழக மக்கள் மாற்றத்தை எவ்வளவு தீவிரமாக விரும்புகிறார்கள் என்பதற்கும் மிகச்சிறந்த சான்றாகப் பார்க்கப்படுகிறது.
