"ஸ்டாலினின் செருப்புதான் தமிழகத்தை ஆள்கிறது" - திண்டுக்கல் லியோனி பேச்சால் சர்ச்சை!
திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ. லியோனி முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூறிய சர்ச்சை உவமை, அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகவும் சலசலப்பாகவும் மாறியுள்ளது.
திருமண விழாவில் மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி, மு.க.ஸ்டாலினை அதீதமாகப் புகழ்ந்து பேசும் நோக்கில் ராமாயணக் கதையை உதாரணமாக இழுத்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "ராமாயணத்தில் ராமன் காடுகளுக்குச் சென்றபோது அவனது பாதுகையை (செருப்பை) அரியணையில் வைத்து தம்பி பரதன் அயோத்தியை ஆண்டான். அதேபோல, தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களே... நீங்கள் கழற்றி வைத்த உங்களது செருப்பு தான் இன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், விடியல் பயணம், மெட்ரோ ரயில் திட்டம் போன்ற முந்தைய திமுக அரசின் திட்டங்களினாலேயே தற்போதைய ஆட்சி இயங்கி வருவதாகவும், அந்தத் திட்டங்களின் பலன்களை அனுபவிக்கும் மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலினையே நினைத்துப் பார்க்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் சலசலப்பும் விமர்சனங்களும்:முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையிலேயே அமர்ந்திருந்த சூழலில், "செருப்பு" என்ற வார்த்தையைப் பயன்படுத்தி லியோனி ஆற்றிய இந்த உரை இணையதளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. தலைவரைப் புகழ்கிறேன் என்ற பெயரில் பொதுமேடையில் அரசியல் நாகரிகமற்ற முறையில் லியோனி பேசியதாக அரசியல் விமர்சகர்களும் நடுநிலையாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
