“ஸ்டார்ட் த மியூசிக்... பனையூரில் திருவிழா...” இன்று தவெக வேட்பாளர்களுடன் விஜய் முக்கிய ஆலோசனை!
இன்று பனையூரில் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் தவெக தவிர்க்க முடியாத சக்தியாக முடிவுகள் வந்திருப்பது தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
35 சதவீத வாக்குகள் வரையில் விஜய்க்கு கிடைக்கும் என்ற நிலையில், திமுகவுக்கும் கிட்டத்தட்ட அதே சதவீதம் தான் கிடைக்கும் என்று கூறப்பட்டிருப்பது இந்த தேர்தல் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே தான் என்பது தெளிவாகி இருக்கிறது. இந்நிலையில் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த தனது கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் இன்று சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.
இன்று மதியம் 1 மணியளவில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுவதும் தவெக சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வழங்கப்பட்ட '17C' ஒரிஜினல் படிவத்தை (வாக்குப் பதிவு விபரங்கள் அடங்கிய ஆவணம்) வேட்பாளர்கள் அனைவரும் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விஜய் சில முக்கியமான அறிவுரைகளை வழங்கவுள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் குளறுபடிகள் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு சுற்றின் முடிவுகளையும் தீவிரமாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படும். 17C படிவத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகளில் கட்சிக்கு வாக்குகள் அதிகமாக விழுந்துள்ளன என்பதை விஜய் நேரடியாக ஆய்வு செய்யவுள்ளார். முடிவுகள் எப்படி இருந்தாலும், தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், தேர்தல் ஆணைய விதிகளை மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட உள்ளது.
திருச்செந்தூர் மற்றும் ஷீரடி ஆன்மீகப் பயணங்களை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் விஜய், நேரடியாகத் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
