பத்திரமா இருங்க மக்களே... தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்... இயல்பை விட 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு!
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சூரியன் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார். மாநிலத்தின் பல இடங்களில் வெயில் சதமடித்து வரும் நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இன்னும் தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ள தகவலின்படி வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை தமிழகத்தில் கோடை வெப்பம் மிகத் தீவிரமாக இருக்கும். பகல் நேர வெப்பநிலையானது இயல்பை விட 2°C முதல் 3°C வரை கூடுதலாகப் பதிவாக வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தரவுகளின்படி, இன்றைய (ஏப்ரல் 12) நிலவரம்: இன்றைய வெப்பநிலைப்படி தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்சமாக 37°C வரை வெப்பம் பதிவாகியுள்ளது. வரும் புதன் (ஏப்ரல் 15) மற்றும் அடுத்த புதன் (ஏப்ரல் 22) ஆகிய தேதிகளில் வெப்பநிலை 39°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு திசையில் இருந்து சுமார் 5 முதல் 10 mph வேகத்தில் காற்று வீசுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கத் தாராளமாகத் தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்த வேண்டும். முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பருத்தி ஆடைகளை அணிவது வெப்பத்திலிருந்து ஓரளவிற்குப் பாதுகாக்கும். தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் வெப்ப அலை போன்ற சூழல் நிலவுவதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
