பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் ரூ. 5 லட்சம் கோடி காலி.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
கடந்த சில நாட்களாகவே ஊசலாட்டத்தில் இருந்த இந்தியப் பங்குச்சந்தை, இன்று உலகளாவிய அரசியல் பதற்றங்கள் காரணமாகப் பெரும் சரிவை நோக்கிச் சென்றது. பங்குச்சந்தை இன்று (பிப்ரவரி 27) வர்த்தக நேரத் தொடக்கத்திலிருந்தே கடும் சரிவைச் சந்தித்தது முதலீட்டாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று நிஃப்டி சுமார் 450 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 25,000 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சியடைந்து 81,000 புள்ளிகளுக்குக் கீழ் சரிந்தது.

பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தான் மீது போர் அறிவித்துள்ள செய்தி, தெற்காசியப் பிராந்தியத்தில் பெரும் பொருளாதாரப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அதே போன்று அனில் அம்பானியின் சொத்துக்கள் முடக்கப்பட்டதும், அவர் அமலாக்கத் துறை விசாரணையில் இருப்பதும் கார்ப்பரேட் நிறுவனப் பங்குகளின் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெருமளவிலான பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்து வருவது சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். எஸ்பிஐ (SBI), ஹெச்டிஎஃப்சி (HDFC) மற்றும் இன்போசிஸ் (Infosys) போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிந்துள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருவது முதலீட்டாளர்களைப் பாதுகாப்பான முதலீடுகளை (தங்கம் போன்றவை) நோக்கித் தள்ளியுள்ளது. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சந்தை இன்னும் சில நாட்களுக்கு இதே போன்ற நிலையற்ற தன்மையுடன் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
