பங்குச் சந்தையில் ரூ.1.8 கோடி நஷ்டம்... மனைவி, 2 மகன்களுடன் தலைமை ஆசிரியர் தற்கொலை!

 
ஷேர் தற்கொலை ஷேர் தற்கொலை

பங்குச் சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் அதன் மூலம் உருவான கடன் சுமை காரணமாக, மராட்டிய மாநிலத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு இளம் மகன்களுடன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மராட்டிய மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்ஷி தாலுகா, கட்டிஜ் கிராமத்தைச் சேர்ந்தவர் யோகேஷ் பாட்டீல் (40). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மாதுரி (37) என்ற மனைவியும், அதர்வா (11), சிவான்சின் (9) ஆகிய இரு மகன்களும் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக யோகேஷ் பாட்டீலின் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டுக் கிடந்ததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார், இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்த போலீசார், உள்ளே யோகேஷ் பாட்டீல், அவரது மனைவி மற்றும் இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலீசார் சம்பவ இடத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது, யோகேஷ் பாட்டீல் எழுதி வைத்திருந்த 22 பக்கங்கள் கொண்ட மிக நீளமான தற்கொலைக் கடிதம் ஒன்றை மீட்டனர். அந்தக் கடிதத்தில், தனது இந்த விபரீத முடிவிற்கு வேறு யாரும் காரணமில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், பங்குச் சந்தை மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்ட ஆசைப்பட்டு, பல்வேறு இடங்களில் வாங்கிய கடன்கள் மூலம் சுமார் 1.8 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும், ஆனால் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் குறித்த பயம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கடிதத்தில் விவரித்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக யோகேஷ் பாட்டீல் மிகவும் திட்டமிட்டு, தனக்கு யார் யாருக்கு எவ்வளவு கடன் பாக்கி உள்ளது என்ற விவரங்களையும், அதே நேரத்தில் தனக்கு உள்ள சொத்து விபரங்களையும் அந்தக் கடிதத்தில் துல்லியமாகப் பட்டியலிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவரே, ஆன்லைன் பங்குச் சந்தை மோகத்தால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்துக் கொண்ட சம்பவம் சோலாப்பூர் பகுதியில் பெரும் சோகத்தையும், ஆன்லைன் வர்த்தகத்தின் ஆபத்து குறித்த விவாதத்தையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.