திருடுபோன பல கோடி மதிப்பிலான மரகத தண்டாயுதபாணி சிலை மீட்பு - வெளிநாட்டில் விற்க முயன்றது அம்பலம் - 3 பேர் கைது!
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத தண்டாயுதபாணி சிலையைத் திருடிய மூன்று பேரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையில் விற்க முயன்ற அந்தச் சிலையையும் போலீசார் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பெருங்கரணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற 'நடுபழனி பாலமுருகன்' கோயில் அமைந்துள்ளது. இங்கு இரண்டரை அடி உயரமுள்ள மரகதத்தாலான தண்டாயுதபாணி மூலவர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது. கடந்த 1-ம்தேதி நள்ளிரவில் இந்த மரகத சிலையும், பூஜைக்கான வெள்ளிப் பொருட்களும் மர்மமான முறையில் திருடப்பட்டது.

சிலை திருட்டு குறித்துச் சித்தாமூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தனர். அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஜமீன் புத்தூர் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவருக்குச் சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரது உதவியோடு, பெருங்கரணையைச் சேர்ந்த மணிகண்டன் (26), இளவழகன் (26), ஜெயபால் (20) ஆகிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பணத்தாசை காட்டிச் சிலையைக் திருடச் சொன்ன சர்வதேச கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக, திருடப்பட்ட மரகதச் சிலையை பெருங்கரணை அருகே உள்ள பயன்பாடில்லாத கல்குவாரியில் உள்ள ஆடு, மாடுகள் தண்ணீர் குடிக்கும் குட்டையில் அவர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் அம்பலமானது. அதையடுத்து, காவல்துறையினர் அங்கு சென்று இரண்டரை அடி உயர மரகதத் தண்டாயுதபாணி சிலையை வெற்றிகரமாக மீட்டுள்ளனர். இவ்வழக்கின் பின்னணியில் உள்ள மற்ற நபர்களைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
