ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீர் கல்வீச்சு! 3 ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் உடைப்பு.. பயணிகள் அதிர்ச்சி

 
ரயில் கல்வீச்சு

 

மகாராஷ்டிராவில் ஓடும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயமடையவில்லை.நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (12290) சென்று கொண்டிருந்தது. செப்டம்பர் 25-ம் தேதி இரவு சுமார் 8.27 மணியளவில் மகாராஷ்டிராவின் போர்கேடி ரெயில் நிலையத்தை ரெயில் கடந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்போது ரெயிலின் மீது வெளிப்புறத்தில் இருந்து கல் அல்லது ஏதோ ஒரு பொருள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் A-1, B-2 மற்றும் B-5 ஆகிய 3 பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து விரிசல் ஏற்பட்டன. சம்பவத்தின் போது சில பயணிகள் உணவருந்திக் கொண்டிருந்ததாகவும், திடீரென கண்ணாடி உடைந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்ணாடி உடைந்தாலும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போர்கேடி–சிந்தி ரெயில்வே வழித்தடத்தில் சுமார் 7 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் நடத்தப்பட்டது. அருகில் உள்ள போர்கேடி மற்றும் பிராமணி கிராமங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Stone-pelting at Nagpur-Mumbai Duronto, windows of 3 AC coaches damaged - The Hitavada

அங்குள்ள பொதுமக்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டபோதும், சந்தேகத்திற்குரிய நபர் அல்லது உறுதியான தடயம் எதுவும் கிடைக்கவில்லை.இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது ரெயில்வே சட்டம் பிரிவு 153-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் மீது கல் அல்லது பொருள் வீசியது யார், எந்த இடத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ரெயில்கள் மீது கல்வீச்சு நடத்துவது பயணிகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ரெயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.