ஓடும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் - 3 ஏசி பெட்டிகளின் கண்ணாடிகள் நொறுங்கியது!

 
ரயிலில் கல்வீச்சு கல்வீசி

மராட்டிய மாநிலத்தில் இயக்கப்பட்டு வந்த அதிவேகத் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் திடீரெனக் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில், ரயிலின் ஏசி பெட்டி ஜன்னல் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைந்து சேதமடைந்துள்ளன.

நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் மராட்டியத்தில் உள்ள போர்கேடி ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற போது, தண்டவாளத்தின் ஓரங்களில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென ரயிலை நோக்கிச் சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

துரந்தோ எக்ஸ்பிரஸ்

திடீரென ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கற்கள் உள்ளே விழுந்ததால், ரயிலுக்குள் இருந்த பயணிகள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் ரயிலில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது. எனினும், அதிர்ஷ்டவசமாகப் பயணிகளுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே காவல்துறையினர் போர்கேடி - சிந்தி ரயில்வே பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், ரயில்கள் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற கல்வீச்சுச் சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களைக் கண்டறியக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.