"உங்கள் பழைய உருட்டுகளை நிறுத்துங்க" - அமைச்சர் ஆனந்துக்கு அதிமுக பதிலடி!
சட்டமன்றத்தில் விஜய் பட பேனர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் ஆனந்தின் விமர்சனத்திற்கு, அதிமுக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படத்தின் பேனர்களைக் கிழித்து வீசியதால்தான் அதிமுக ஆட்சி கவிழ்ந்தது" என விமர்சித்துப் பேசினார்.

அமைச்சரின் இந்தப் பேச்சிற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள அதிமுக, "சர்கார் பட பேனரைக் கிழித்ததால் ஆட்சி கவிழ்ந்தது எனச் சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆனந்துக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "எங்கள் தலைவர்களைப் பழித்துப் பேசினால் அதிமுக கழகத் தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள். எனவே, உங்களின் இத்தகைய பழைய உருட்டுகளை சினிமா தியேட்டர் வாசலோடு நிறுத்திக் கொள்ளுங்கள்" என அந்தப் பதிவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
