ஹார்முஸ் நீரிணை சிக்கல்: ஆழ்கடல் கண்ணிவெடிகளை முழுமையாக கண்டுப்பிடிக்கவில்லை - கப்பல் போக்குவரத்தில் நீடிக்கும் முட்டுக்கட்டை!
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அச்சம் அதிகரித்துள்ளது.
நீரிணையின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இருப்பினும், கடலுக்கு அடியில் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அகற்றுவதில் நவீன தொழில்நுட்ப சவால்கள் நீடிக்கின்றன.

ஆழ்கடல் கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்படாத வரை, பெரிய ரக சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் செல்வது பாதுகாப்பானது அல்ல எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான இந்நீரிணையைத் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் இன்றித் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று அமெரிக்கக் கடற்படை மூலம் நீரிணையை முற்றுகையிடப் போவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக எண்ணெய் தேவையில் 20% முதல் 30% வரை இந்த ஒரு பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. நீரிணை மூடப்பட்டால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயரும்.

அமெரிக்காவின் முற்றுகை அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரான் தனது கடற்படைத் தளவாடங்களை நீரிணையை ஒட்டிய பகுதிகளில் குவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்கடல் நீரோட்டம் மற்றும் அழுத்தத்திற்கு இடையே, கடலடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளைச் செயலிழக்கச் செய்வது அதிக நேரம் எடுக்கும் ஒரு நுணுக்கமான பணியாகும்.
இந்த விவகாரத்தில் ஆசியான் (ASEAN) போன்ற சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
