ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்.. ட்ரம்பின் கருத்தை நிராகரித்தது ஈரான்!

 
ஈரான் ஹார்முஸ்

 

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அமெரிக்கப் படைகள் அங்கு "இரும்புச் சுவர்" போன்ற பாதுகாப்பை அமைத்துள்ளன என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கூற்றை ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா வெளியிடும் தகவல்கள் கள நிலவரத்தை மாற்ற முடியாது என்றும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து முடக்கப்பட்டே உள்ளது என்றும் ஈரானின் பாரசீக வளைகுடா ஜலசந்தி அதிகாரம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் ஹார்முஸ் பெட்ரோல்

அமெரிக்கா தனது போரையும் தடைகளையும் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும், அத்துடன் முடக்கி வைத்துள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது. லெபனான் மற்றும் காசா உள்ளிட்ட பகுதிகளிலும் முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிகப் பேச்சுவார்த்தை மற்றும் அமைதி ஒப்பந்த நடைமுறைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இந்த முக்கியக் கடல் வழியில் மீண்டும் பதற்றம் உச்சமடைந்துள்ளது. உலகின் மொத்தக் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இதன் காரணமாகப் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.