கோவையில் மழை வேண்டி கழுதைகளுக்கு வினோத திருமணம்!
கோவை மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பொழிய வேண்டி கிராம மக்கள் கழுதைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.
கோவை மாவட்டம் லக்கிபாளையம் கிராமத்தில் நிலவும் வறட்சியைப் போக்க இப் பாரம்பரிய வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பெண் கழுதைக்குப் பட்டுப் புடவை, வளையல் அணிவித்தும், ஆண் கழுதைக்கு வேட்டி, துண்டு கட்டியும் மணமக்கள் போல அலங்கரிக்கப்பட்டனர். அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓதப்பட்டு கழுதைகளுக்குத் தாலி கட்டும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி வழிபட்டபோது ஊரில் நல்ல மழை பெய்ததாகக் கிராமப் பெரியவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இந்த வினோத திருமண விழாவில் திரளான கிராம மக்கள் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி கம்பங்கூழ் வழங்கப்பட்டு உபசரிக்கப்பட்டது.
