பள்ளி மாணவர்களை விரட்டும் தெரு நாய்கள்! அச்சத்தில் மக்கள்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதுச்சேரியில் தெரு நாய்கள் கூட்டமாகச் சென்று பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்களைத் துரத்தும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சின்னக்காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் கடந்த சில வாரங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் நாய்கள் கூட்டமாகச் சுற்றித் திரிவதுடன், சாலையில் நடந்து செல்வோரையும் துரத்துகின்றன.
இந்நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை தெரு நாய்கள் கூட்டமாகத் துரத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மட்டுமின்றி அதிகாலையில் வேலைக்குச் செல்லும் மீனவர்களும் நாய்களால் அச்சுறுத்தப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக உழவர்கரை நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்தவும், கருத்தடை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
