இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வரும் அதிரடி கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ அல்லது ஊர்வலத்தையோ நடத்தவோ அதில் பங்கேற்கவோ யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், முகநூல் போன்றவற்றின் மூலம் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பிரச்சாரத்தையும் மேற்கொள்ளக்கூடாது. மேலும் தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத வெளி நபர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இதனை உறுதி செய்யத் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23-ம் தேதியன்று வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்குச் சொந்த பயன்பாட்டிற்காகத் தலா ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருவதோ அல்லது கொண்டு விடுவதோ சட்டப்படி குற்றமாகும். வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு வெளியே 2 நபர்களை மட்டுமே கொண்டு தேர்தல் அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடுகள் இன்று மாலை முதல் வாக்குப்பதிவு முடியும் வரை மாநிலம் முழுவதும் மிகத் தீவிரமாகப் பின்பற்றப்பட உள்ளன.
