திருமணமான 7 மாதத்தில் விபரீதம்... இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை!

 
திருமணம் திருமணம்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தில், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாமல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அம்சா (25). இவருக்கும் மேட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மணிபாரதி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மணிபாரதி சென்னையில் கார் டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.

நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அம்சா, திடீரென மின்விசிறிக் கொக்கியில் தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த களமருதூர் போலீசார், அம்சாவின் உடலைக் கைப்பற்றிக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 7 மாதங்களே ஆவதால், அம்சாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமா அல்லது வரதட்சணை கொடுமை ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகிழ்ச்சியாகத் தொடங்க வேண்டிய மணவாழ்க்கை இப்படிப் பாதியிலேயே முடிந்திருப்பது இரு குடும்பத்தாரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.