ஸ்ட்ரைக், தொடர் விடுமுறை.. வங்கி பணிகள் முடக்கம் - பண்டிகைக் காலத்தில் தவிக்கும் பொதுமக்கள்!
தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களின் வருகையால் வங்கிகள் பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பண்டிகைக் காலச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாளை, நாளை மறுதினம் என அடுத்தடுத்து வரும் தொடர் விடுமுறை நாட்களால் வங்கிச் சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் தங்களது அவசர வங்கிப் பணிகளான பணப் பரிமாற்றம், காசோலைத் திருத்தம் மற்றும் கணக்கு தொடர்பான சேவைகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

தொடர் விடுமுறைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ள நிலையில், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், அவசியமானப் பொருட்களை வாங்கவும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவும் ரொக்கப் பணம் இன்றியமையாததாக உள்ளது. ஆனால், வங்கிகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருப்பதால், ஏடிஎம்களிலும் போதுமான பண இருப்பு இல்லாததால் பல இடங்களில் ஏடிஎம் மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டதால் பொதுமக்களால் பணம் எடுக்க முடியவில்லை.

வங்கிகள் செயல்படாததால் ஏடிஎம் இயந்திரங்களில் உடனடியாகப் பணத்தை நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் காலியாகிப் பொதுமக்கள் நீண்ட நேரம் தங்களது அவசரத் தேவைகளுக்கு பணம் எடுப்பதற்கு கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
