பொதுத்தேர்வெழுதச் சென்ற மாணவன் பேருந்திலிருந்து விழுந்து பலி!

 
பலி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பத்தாம் வகுப்பு செய்முறை பொதுத் தேர்விற்குச் சென்ற மாணவன் பேருந்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி வ.உ.சி தெருவைச் சேர்ந்த அழகர் என்பவரது மகன் புவியரசு (15). வேங்கடாகுளத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர், இன்று நடைபெற்ற அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்விற்காக, ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் புவியரசு பயணம் செய்தார். பேருந்து ஆலங்குடி அடுத்த குப்பக்குடி வளைவில் திரும்பியபோது, எதிர்பாராதவிதமாகப் பேருந்திலிருந்து மாணவன் புவியரசு கீழே விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பள்ளி மானவி தற்கொலை

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். மாணவனின் உடலைப் பார்த்துப் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது. இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்: ஆலங்குடி பகுதியில் இயங்கும் தனியார் பேருந்துகள் அதிவேகமாகச் செல்வதே விபத்துகளுக்குக் காரணம் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மாணவர்களின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். செய்முறைத் தேர்விற்காக ஆர்வமுடன் புறப்பட்டுச் சென்ற மாணவன், விபத்தில் சிக்கி உயிரிழந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.