பீகாரிலும் வெடித்த மாணவர் போராட்டம் - தடியடி, கண்ணீர் புகை வீச்சு!

 
பீகார் டெல்லி நீட்

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மாணவர்களின் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.

இந்திய மாணவர் சங்கம் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சந்தீப் சவுரவ் தலைமையில் இம்மாபெரும் பேரணியை ஒருங்கிணைத்தன. காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, ஆளுநர் இல்லமான லோக் பவனை நோக்கி முன்னேறியது.

பேரணி தடைசெய்யப்பட்ட முக்கிய பகுதியை நெருங்கியபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து நிலைமையைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினர்.

காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் மாணவர்களைக் கலைக்க முயன்றனர். தள்ளுமுள்ளு மற்றும் கல்வீச்சில் சில காவலர்கள் ரத்தக் காயங்களுடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவியதைத் தொடர்ந்து, தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான போராட்டம் தற்போது பீகாரில் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாநில சட்டமன்றப் வளாகப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.