வன்முறையாக மாறிய மாணவர்களின் போராட்டம்... பிரான்ஸில் 1,200 மாணவர்கள் கைது - வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டன!

 
வன்முறை பிரான்ஸ்

ஐரோப்பிய நாடான பிரான்ஸில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மாணவர்களின் போராட்டம் கடுமையான வன்முறையாக உருவெடுத்துள்ளது.

பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மெக்ரானும், பிரதமராக செபஸ்டின் லிகார்னோவும் செயலாற்றி வரும் நிலையில், கல்வி முறை மாற்றங்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்புகளில் போதிய ஆசிரியர்கள் இன்மை, உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் நீண்ட நேர வகுப்புகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டமாகவும் பரிணமித்துள்ளது. இதில் பிரான்ஸில் வசித்து வரும் மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரும், சட்டவிரோத அகதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

வன்முறை பிரான்ஸ்

இந்நிலையில், பல்வேறு தரப்பினர் நடத்தி வந்த இந்தப் போராட்டம் நேற்று திடீரெனத் தீவிர வன்முறையாக வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் ஏராளமான கடைகளைச் சூறையாடியதுடன், பகல் பொழுதிலேயே வணிக வளாகங்களில் இருந்து பொருட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறையானது தலைநகர் பாரிஸ் மட்டுமின்றி, மெர்சிலி, லியோன், லிமொகொஸ், லிலி, ரென்னிஸ், டொலோஸ், பர்டியக்ஸ், நெண்டிஸ் மற்றும் செயின் இடினி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் பொதுச்சொத்துகளையும் தனியார் சொத்துகளையும் தீவைத்து நாசம் செய்து வருகின்றனர். குறிப்பாக, லிலி நகரில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த தொலைபேசிகளைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், பிரான்ஸ் நாட்டின் வரலாற்று அடையாளமாகத் திகழும் லிமொகொஸ் நகரில் அமைந்துள்ள 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியக் கட்டடம் ஒன்று வன்முறையாளர்களால் முற்றிலுமாகத் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கால்பந்து

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வரும் இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதுவரை வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி நாடு முழுவதும் சுமார் 1,200 பேரைக்காவல்துறையினர் கைது செய்துள்ளதாகப் பிரான்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.