மரணத்தை வென்ற மாணவன்... புற்றுநோயுடன் போராடி 96.6 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை!
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஆரவ் வத்ஸ் செய்துள்ள சாதனை அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக லிம்போபிளாஸ்டிக் லிம்போமா எனும் கொடிய புற்றுநோய் பாதிப்புடன் போராடி வரும் இந்த மாணவர், தேர்வில் 96.6 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார். உடல்நிலை மிகக் மோசமாக இருந்த நிலையிலும், மன உறுதியோடு தேர்வைச் சந்தித்த இவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மருத்துவமனையில் கடும் சிகிச்சைகளுக்கு மத்தியிலும், ஆரவ் தனது படிப்பைக் கைவிடாமல் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை விடாமுயற்சியுடன் படித்து வந்துள்ளார். பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலில், இணையதள வகுப்புகள் மூலமாகவே தனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டு தேர்வுக்குத் தயாராகியுள்ளார். வலியும் வேதனையும் ஒருபுறம் வாட்டினாலும், சாதிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு மட்டுமே அவரை இந்த இமாலய வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.

மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்த ஆரவின் இந்தக் கதை, தோல்விகளால் துவண்டு கிடக்கும் பல மாணவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாகவும் ஊக்கமாகவும் அமைந்துள்ளது. நோயை ஒரு தடையாகக் கருதாமல், அதனையும் வென்று காட்டிய இந்தச் சிறுவனின் உறுதி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரது வெற்றியைச் சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவரே சாட்சி என்று புகழ்ந்து வருகின்றனர்.
