நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்... நீட் தேர்வு ரத்து, NTA-வை கலைக்க வலியுறுத்தல்!
அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்தே தொடர்ந்து சர்ச்சைகளையும், எதிர்புகளையும் சந்தித்து வருகிறது மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு. இந்நிலையில், நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் நிகழ்ந்த வினாத்தாள் கசிவு முறைகேடு காரணமாக, நடப்பாண்டு நடத்தப்பட்ட தேர்வை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகக் கூறி, 22 லட்சம் மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு உறுதியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறுதேர்வு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படாதது மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் முதல் சென்னை சாஸ்திரி பவன் வரை போராட்டக் களமாக மாறியுள்ளது. தேர்வினை முறையாக நடத்தத் தவறிய தேசிய தேர்வு முகமையை உடனடியாகக் கலைக்க வேண்டும் என மாணவர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் மாணவர் அமைப்புகள் திரண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

"மாணவர்களின் உழைப்பையும், கனவையும் சிதைக்கும் வகையில் வினாத்தாள் கசிவு அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் உறுதியளித்திருந்தாலும், மாணவர்களின் போராட்டம் தணியவில்லை. ஒரே நாளில் 22 லட்சம் மாணவர்களின் ஓராண்டு உழைப்பு வீணாகியுள்ள இந்தச் சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
