பள்ளிக்கு மாணவர்கள் பைக், ஸ்கூட்டர் ஓட்டி வரக்கூடாது; மீறினால் பறிமுதல் -பள்ளி கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் ஸ்கூட்டர், பைக் உள்ளிட்ட இருசக்கர மோட்டார் வாகனங்களைப் பள்ளிக்கு ஓட்டி வரக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.
புதிய கல்வியாண்டு (2026-27) இன்று முதல் தொடங்குவதையொட்டி, பள்ளி வளாகங்களில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பெருமளவில் அச்சுறுத்தலாக இருக்கும் வாகனப் பயன்பாடு குறித்து மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் ஸ்கூட்டர், பைக் போன்ற இருசக்கர மோட்டார் வாகனங்களை ஓட்டிக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் வரக் கூடாது. இந்தத் தடையை மீறி ஏதேனும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தால், அந்த வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மாணவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட மாட்டாது. நேரடியாக அவர்களின் பெற்றோர்களைப் பள்ளிக்கு வரவழைத்து, எச்சரித்து அவர்களிடம் மட்டுமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.
முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இருசக்கர வாகனங்களை இயக்குவதும், அதனால் சாலை விபத்துகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கிப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும், கல்வித்துறையின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
