குஷியில் மாணவர்கள்: பிணையின்றி ரூ.10 லட்சம் வரை கடன்.. 3% வட்டிச் சலுகை - பிஎம் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ரூ.7,754 கோடி நிதி ஒதுக்கீடு!
இந்தியாவின் திறமையான இளைஞர்கள் நிதி நெருக்கடி காரணமாக உயர்கல்வியைத் தவறவிடக் கூடாது என்ற நோக்கில் கொண்டுவரப்பட்ட ‘பிஎம் வித்யாலட்சுமி’ திட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சகம் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 2024-31 காலகட்டத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியுடன், தற்போது கூடுதலாக ரூ.7,754 கோடி நிதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெற மாணவர்களோ அல்லது பெற்றோரோ சொத்துக்களையோ அல்லது நகை போன்ற எவ்விதப் பிணையோ வழங்கத் தேவையில்லை. இந்தியாவின் டாப் 860-க்கும் மேற்பட்ட தரமான உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள், தங்களது படிப்புச் செலவு மற்றும் இதர செலவுகளுக்குத் தேவையான முழுத் தொகையையும் கடனாகப் பெறலாம். ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு மத்திய அரசே 75% கடன் உத்தரவாதத்தை வழங்குகிறது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்கும் மாணவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சம் வரை: தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைப் படிப்புகளில் சேரும் இத்தகைய மாணவர்களுக்கு, படிப்பு காலம் மற்றும் அதற்குப் பிந்தைய ஒரு ஆண்டு வரை முழு வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி முழுமையாக டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்: www.pmvidyalaxmi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆதார் அட்டை, பான் கார்டு, சேர்க்கை உறுதி கடிதம் (Offer Letter), மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவை அவசியம்.

வட்டி மானியத் தொகையானது பயனாளிகளின் 'பிஎம் வித்யாலட்சுமி டிஜிட்டல் ரூபி' செயலியில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதுவரை 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் அடைந்துள்ள நிலையில், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள புதிய நிதியானது அடுத்த 7 ஆண்டுகளில் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்குக் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
