குஷியில் மாணவர்கள்... ஏப்ரல் 17 முதல் 48 நாட்கள் கோடை விடுமுறை!
ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் குடியரசு தின விடுமுறைகளை அனுபவித்த மாணவர்களுக்கு, இப்போது கோடை விடுமுறைக்கான அறிவிப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு விடுமுறை அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வுகள் வரும் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. சட்டமன்றத் தேர்தல் பணிகள் மற்றும் வாக்குச்சாவடிகளாகப் பள்ளிகள் பயன்படுத்தப்பட உள்ளதால், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 16-ம் தேதிக்குள் அனைத்துத் தேர்வுகளையும் நடத்தி முடிக்கப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி விடுமுறை தொடக்கம். பள்ளிகள் திறப்பு ஜூன் 4ம் தேதி. மொத்த விடுமுறை நாட்கள்: 48 நாட்கள். ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை தவிர்த்துப் பல அரசு விடுமுறைகளும் வரிசைகட்டி வருகின்றன: ஏப்ரல் 3ம் தேதி புனித வெள்ளி, ஏப்ரல் 14ல் தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி. ஏப்ரல் 23ம் தேதி தமிழகச் சட்டமன்றத் தேர்தல் (பொது விடுமுறை).
மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் விடுமுறை தொடங்கினாலும், ஆசிரியர்கள் பள்ளி இறுதி வேலை நாள் வரை பணிக்கு வர அறிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேர்தல் பணிகளுக்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய கல்வியாண்டுக்கான முன்னேற்பாடுகளுடன் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் கோடை வெயிலைச் சமாளிக்கவும், சுற்றுப்பயணம் செல்லவும் 48 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
