“மாணவர்களிடம் ஒரு ரூபாய் கூட வசூலிக்கக்கூடாது... தேர்வு கட்டணம் வசூலிக்க தடை” - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் மற்றும் முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. முருகன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம், குறிப்பாக 14 வயதுக்கு உட்பட்ட கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடம் எவ்வித அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் அல்லது முறையற்ற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என நீதிபதிகள் இடைக்காலத் தடை ஆணை பிறப்பித்தனர்.
உயர்நீதிமன்ற ஆணைப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் தேர்வுக் கட்டணமோ அல்லது வினாத்தாள் கட்டணமோ வசூலிக்கக் கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு உடனடியாக அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் மாதாந்திர தேர்வுகளுக்கு ரூ.50 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்பட்டு வந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், இனி ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது என்றும், மீறி வசூலித்தால் அது கடுமையான நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
