பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களே உஷார்!! இதை செஞ்சா வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடை!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன. இதனையடுத்து பல்வேறு அறிவுறுத்தல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும், தேர்வு இயக்ககம் மேற்கொண்டுள்ளது. அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைய உள்ளது. அதேபோல் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி முடிவடைய உள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். இதற்காக தமிழ்நாட்டில் 3,185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்வு அறையில் மாணவர்கள் தவறு செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அரசு தேர்வுகள் துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வறையில் துண்டு தாள்களை தன் வசம் வைத்திருந்தால் அந்த மாணவர் பருவத்தில் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதுடன் ஓராண்டு தடை.
ஆள் மாறாட்ட நடவடிக்கை செய்தால் பொது தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். மேலும் பருவத்தில் எழுதிய தேர்வுகள் ரத்து செய்யப்படும். விடைத்தாள்களில் விடைகளைத் தவிர்த்து வேறு விஷயங்களை எழுதினால் குறிப்பிட்ட அந்த மாணவர் எழுதிய பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
விடைத்தாள்களை தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பினால் மூன்றாண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என 15 வகையான முறைகேடுகளை குறிப்பிட்டு அதற்குரிய தண்டனை விவரங்களை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.