மயங்கி விழும் மாணவர்கள்... இங்கிலாந்தில் கடும் வெயிலால் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடல்!
ஐரோப்பிய நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் வெப்பத்தின் உக்கிரம் கடுமையாக அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பள்ளி வகுப்பறைகளில் குளிரூட்டும் வசதிகள் போதிய அளவில் இல்லை. தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இந்த வகுப்பறைகள் அனைத்தும் அனல் உமிழும் நிலைக்கு மாறின.

வகுப்பறைகளின் கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு குறைவாக உள்ள மற்றும் தற்பொழுது திறந்திருக்கும் ஒரு சில பள்ளிகளில், மாணவர்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கப் பல்வேறு மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மாணவர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்கத் தொடர்ச்சியாகக் குளிர்ந்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

உணவு முறையில் மாற்றம்: மதிய நேர வெப்பத்தைச் சமாளிக்கும் விதமாக, மாணவர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் மதிய உணவிற்குப் பதிலாகக் குளிர்ந்த ஐஸ்கிரீம்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் அடங்கிய சாலட்டுகள் தற்பொழுது வழங்கப்பட்டு வருகின்றன.
ஐரோப்பாவில் வெயில் சதமடித்து (100°F க்கும் மேல்) பதிவாகி வரும் இந்த அசாதாரணச் சூழ்நிலை, உலகளாவிய பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
