ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள்... தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடியும், இடமில்லாமல் நின்று கொண்டும் பயணம் செய்துள்ளனர்.
இந்தப் பேருந்தில் ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத வகையில் எழுபதுக்கும் மேற்பட்ட பயணிகள் நெரிசலில் பயணம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்களை படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணிக்க அனுமதித்த அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் அலட்சியமாகச் செயல்படும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்துத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
