போலீஸ் குடியிருப்பில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் பல லட்ச ரூபாய் நகை, பணம் கொள்ளை!

 
நகை கொள்ளை நகை கொள்ளை

"வேலியே பயிரை மேய்ந்த கதையாக" இல்லாமல், வேலிக்குள்ளேயே புகுந்து திருடிய கதையாக உத்தரப் பிரதேசத்தில் ஒரு வினோதமான கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜலான் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் புகுந்த கொள்ளையர்கள், இரு உயர் அதிகாரிகளின் வீடுகளைச் சூறையாடிச் சென்றுள்ளனர். ஜலான் மாவட்டம், கொட்வாலி ஒடாய் பகுதியில் அமைந்துள்ள காவலர் குடியிருப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கல்பி பகுதியில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் உதய் பிரதாப் சிங் மற்றும் ஜான்சி பகுதியில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் ஆகியோரது வீடுகளே கொள்ளையர்களின் இலக்காகின. நேற்று இரு அதிகாரிகளின் குடும்பத்தினரும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தனர். வீடுகள் காலியாக இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பட்டப்பகலிலேயே உள்ளே புகுந்துள்ளனர்.

திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இன்று காலை அதிகாரிகள் வீடு திரும்பியபோதுதான், கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் நிபுணர்கள், கொள்ளையர்களின் கைரேகைகளைச் சேகரித்துள்ளனர். காவலர் குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளூர் நபர்களின் உதவியின்றி இவ்வளவு துல்லியமாகக் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

காவலர் குடியிருப்பிலேயே இத்தகைய சம்பவம் நடந்தது அம்மாநிலக் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.